சென்னை டி.பி. சத்திரத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் விஸ்வநாதன், தனது வேலைவாய்ப்பற்ற மகன்களின் எதிர்காலத்திற்காகச் சொந்த வீட்டை விற்றுவிட்டு, மனைவியின் அண்ணன் வீட்டு அருகே குடியேறினார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவியின் அண்ணன் மகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளருமான கலைவாணி, விஸ்வநாதனிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். தவெக மாவட்ட செயலாளரும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் தென்னரசு தனக்கு நெருக்கமானவர் என்று கூறி, படப்பை அருகே சாலமங்கலத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி வீடு வாங்கித் தருவதாக நம்பவைத்து, முதற்கட்டமாக ரூ.7 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.
ஆனால், சொன்னபடி வீடு வாங்கித் தராமல் கலைவாணி காலம் கடத்தியதால், விஸ்வநாதன் தம்பதியினர் அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தோடு நில்லாமல், விஸ்வநாதனின் வீட்டிற்கு வந்த கலைவாணி, அவரது ஏடிஎம் கார்டைத் திருடி ரகசியமாக மேலும் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, விஸ்வநாதன் காஞ்சிபுரத்தில் வாங்கி வைத்திருந்த இடத்தின் அசல் ஆவணங்களையும் ஏமாற்றிப் பறித்துக்கொண்டு, அதைத் திருப்பித் தர மறுத்து வந்துள்ளார். இதனால் பணத்தையும், நில ஆவணங்களையும் இழந்து விஸ்வநாதன் குடும்பத்தினர் நிர்கதியாய் நின்றனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் விஸ்வநாதன், பொறுமையிழந்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அரசியல் பலத்தோடு காவல் நிலையம் வந்த கலைவாணி, “நான் பணம் வாங்கவே இல்லை, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது?” என்று கூறி கறாராக மறுத்துள்ளார். காவல்துறையினரும் தவெக பெண் நிர்வாகிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. காவல் நிலையம் சென்றும் நியாயம் கிடைக்காத வேதனையிலும், மிகுந்த மன உளைச்சலிலும் வீடு திரும்பிய விஸ்வநாதன், குடும்பத்தினரிடம் “பணத்தை எப்படியாவது மீட்டுத் தருகிறேன்” என்று கூறிவிட்டு எலி மருந்தை உட்கொண்டார். உயிருக்குப் போராடிய அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதியவரின் மரணம் பூதாகரமானதை அடுத்து, படப்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல், கலைவாணியிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இறுதிச்சடங்கு செலவிற்காக கலைவாணியிடமிருந்து வெறும் 1 லட்சம் ரூபாயை மட்டும் போலீசார் வாங்கிக் கொடுத்துவிட்டு, பணத்தை மீட்டுத் தராவிட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்வோம் என்று அலட்சியமாகப் பேசியுள்ளனர். தற்போது சொந்த வீடும், பணமும் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துள்ள விஸ்வநாதனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி ஏழை முதியவரின் தற்கொலைக்குக் காரணமான தவெக நிர்வாகி கலைவாணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட போலீசார் மீது அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
