தமிழ்நாடு அரசியலில் ‘போயஸ் கார்டன்’ என்ற பெயருக்கு எப்போதுமே தனி மவுசும், வரலாறும் உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, தமிழகத்தின் அதிகார மையமாக விளங்கிய அந்த ‘வேதா நிலையம்’ பங்களாவை, தற்போதைய முதலமைச்சர் விஜய் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அரசியல் வட்டாரத்திலும், சினிமா உலகிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தற்போது சென்னையின் நீலாங்கரையில் வசித்து வரும் விஜய், தினமும் தலைமைச் செயலகத்திற்குப் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் சிரமங்களையும் தவிர்க்கவே, நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்கு மாற ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த பங்களாவின் தற்போதைய உரிமை அவரது அண்ணன் மகள் ஜெ. தீபாவிடம் உள்ளது. சுமார் 350 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தை வாங்குவது தொடர்பாக, விஜய்யின் குழுவினர் ஏற்கெனவே தீபாவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த ‘மாஸ்’ டீல் இறுதியானால், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கு பக்கத்து வீட்டுக்காரராக மாறுவதுடன், போயஸ் கார்டன் மீண்டும் ஒரு முதலமைச்சரின் இல்லமாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் மையமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
