“வேலை, குழந்தைன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிறது நான் தான்…” ஆனா YSL மேக்கப் கிட் ஆபீஸ் பொண்ணுக்கு…! பரிசு பொருளை தூக்கி கொடுத்த கணவர்…. மனம் நொந்து பேசிய மனைவி…!!

By Devi Ramu on ஆடி 18, 2026

Spread the love

நிறுவனத்தின் மதிய உணவு விருந்து ஒன்றில் கணவர் வென்ற ஆடம்பர ‘YSL’ அழகுசாதனப் பரிசுப் பெட்டியை, வீட்டிற்கு எடுத்து வராமல் அங்கிருந்த சக பெண் ஊழியருக்கு உடனடியாகப் பரிசளித்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தை ஹலீமா என்ற பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தான் வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொண்டு சமையல் செய்து கொண்டிருந்த வேளையில், கணவர் பொதுவெளியில் வேறொரு பெண்ணை மகிழ்வித்துக்கொண்டிருந்தது தன்னை ஏமாற்றமடையச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் புகைப்படத்தைத் தங்களது நிறுவனப் பக்கத்தில் பகிர்ந்து கணவரின் தாராள மனதைப் பாராட்டியிருந்ததைப் பார்த்தபோது, ஒரு மனைவியாகத் தனது இருப்பு அங்கே முற்றிலும் மறைக்கப்பட்டதாகத் தான் உணர்ந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கணவரிடம் கேட்டபோது, அவர் அதனைத் வெறும் ‘பைத்தியக்காரத்தனமான பொறாமை’ என்று அலட்சியப்படுத்தியதுடன், சக ஊழியர்கள் முன்னிலையில் ஒரு ஆடவர் அழகுசாதனப் பெட்டியைத் தன்வசம் வைத்திருப்பது சங்கடமாக இருந்ததால் அவ்வாறு செய்ததாகத் தற்காத்துக் கொண்டார். இந்த விவகாரம் எக்ஸ், ரெடிட் உள்ளிட்ட தளங்களில் பரவி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், இணையவாசிகள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் திருமணமான ஒரு நபர் எத்தகைய பொருளாக இருந்தாலும் தன் மனைவியைப் பற்றி யோசிக்காமல் வேறொரு பெண்ணுக்குப் பரிசளிப்பது தவறு என்றும், மற்றொரு தரப்பினர் இது அலுவலகச் சூழலில் நடந்த ஒரு சாதாரண மரியாதையான செயல் மட்டுமே என்றும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.