பிரபல நடிகரான அரவிந்த்சாமி தளபதி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் நடித்த படங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டு தந்தையின் தொழிலை கவனித்து கொள்வதற்காக சினிமாவை விட்டு சென்றார். அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு தான் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
தனி ஒருவன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் வெளியிட்ட படங்களில் அரவிந்த்சாமி நடித்தார். இப்போது அவரது நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு அரவிந்த்சாமி அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மலையாள இயக்குனர் சித்திக் இயக்கினார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.முருகன் குமார் தயாரித்தார். இந்த நிலையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்ததற்காக அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் மூன்று கோடி ரூபாய் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் ஒப்பந்தத்தின்படி அரவிந்த் சாமிக்கு சம்பளத்தை கொடுக்காமல் தயாரிப்பாளர் பாக்கி வைத்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் சமயத்தில் அரவிந்த்சாமி இடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இதனால் அரவிந்த்சாமி பட தயாரிப்பாளர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு அரவிந்த்சாமிக்கு கொடுக்க வேண்டிய தொகையை 18 சதவீத வட்டியுடன் சேர்த்து 65 லட்சம் டிடிஎஸ் தொகை 27 லட்ச ரூபாயை வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தயாரிப்பாளர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. இதனால் அந்த உத்தரவை அமல்படுத்த கோரி அரவிந்த்சாமி மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பாளர் முருகன் சார்பில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என கூறப்பட்டது. சொத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் நீதிபதி தயாரிப்பாளர் முருகனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 8-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.