தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அருணாச்சலம் பேசிய வாக்குமூல வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், காவல்துறையினர் தன்னைத் தலையிலும் காலிலும் மிகக் கொடூரமாகத் தாக்கியதாக அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ ஆதாரம் மூலம் அருணாச்சலத்தின் மரணத்திற்குப் காவல்துறையினரின் அத்துமீறிய தாக்குதலே முழுக் காரணம் என்பது உறுதியாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குமூல வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் அருணாச்சலத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நீதி கிடைக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் உறுதியாக உள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
