தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.
அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

சுந்தர் சி கமிட்டானால் அந்த படம் எப்படியும் ரிலீஸாகிவிடும். பிரச்சனை இல்லாமல் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்பதுதான் அவர் பற்றி வெளியில் இருக்கும் கருத்து. ஆனால் ஒரே ஒரு படத்தில் மட்டும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அது அருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமான முறை மாப்பிள்ளை திரைப்படம். அந்த பட அனுபவம் பற்றி பேசியுள்ள அருண் விஜய் “அது என் முதல் படம் என்பதால் எனக்கு எதுவும் தெரியவில்லை. சுந்தர் சி சாரை நம்பிதான் போனேன். ஆனால் இடையில் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் விலகிக் கொண்டார். கடைசியில் மணிவண்ணன் சார்தான் அந்த படத்தை முடித்துக் கொடுத்தார்” எனக் கூறியுள்ளார்.
