தமிழ் சினிமாவில் மிகக் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்திய நடிகைகளில் ஒருவர் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு ஷாலினி புதிதாக எந்த படங்களையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கனவே நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு பின்னர் சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார்.

அவர் நடிப்பில் வெளியாகி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று ‘அலைபாயுதே’. அந்த படத்தில் அவரும் மாதவனும் நடித்த வேடம் அப்போதைய இளைஞர்களை பிரதிபலித்ததால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. இன்றளவும் மாதவன் – ஷாலினி ஜோடியின் கெமிஸ்ட்ரி சிலாகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அலைபாயுதே படத்தின் போது ஷாலினி பகிர்ந்த ஒரு விஷயத்தைப் பல ஆண்டுகள் கழித்து மாதவன் பகிர்ந்துள்ளார். அதில் “அலைபாயுதே படம் நடிக்கும்போது நானும் ஷாலினியும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டே இருப்போம். அப்போது அவர் என்னிடம் சொல்வார் ‘இந்த படத்தில் நீ என்னுடன் நடித்திருக்கக் கூடாது. இந்த படத்துக்கு அஜித்தான் சரியான சாய்ஸ் என்று” எனக் கூறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
