ஆட்சியைக் கவிழ்க்க கூட்டணிக் கட்சிகளே சதி?…. “காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் முதுகில் குத்தும்”…. திமுகவை உதாரணம் காட்டி அர்ஜுன் சம்பத் பகீர் எச்சரிக்கை….!

By Nanthini on கார்த்திகை 18, 2026

Spread the love

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கார் தீ வைப்புச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து எட்டு நாட்களாகியும் காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதித்திட்டமா என்பது குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

வரும் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை அர்ஜுன் சம்பத் எழுப்பினார். நீதிமன்றம் அனுமதியும் பாதுகாப்பும் வழங்கிய போதிலும், முந்தைய ஆட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பக்தர்கள் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நேரில் வந்து மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இதனை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்றத் தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

   

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு. வெங்கடேசன், வஞ்சிநாதன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது விமர்சனங்களை முன்வைத்த அர்ஜுன் சம்பத், மத நல்லிணக்க கூட்டமைப்பு என்ற பெயரில் மதுரையில் பதற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாகக் கூறினார். மேலும், கடந்த காலங்களில் பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர் நிர்மல் குமார் சட்டத்தை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

   

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்தும் அர்ஜுன் சம்பத் தனது விமர்சனங்களை முன்வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறிய அவர், காங்கிரஸ் கட்சி எப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைக்கும் வரலாற்றைக் கொண்டது எனக் குறிப்பிட்டார். டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய அர்ஜுன் சம்பத், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயல்வதைத் தடுக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமை மூலம் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு விஜய் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்றார்.

 

சோனியா காந்தியின் புத்தகத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாகவும், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளுக்குத் துணை போவதாகவும் குற்றம் சாட்டிய அர்ஜுன் சம்பத், இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் சீக்கியர்களின் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த காலங்களில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நிறைவாக, முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று அர்ஜுன் சம்பத் சாடினார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட விவகாரம், போதைப்பொருள் கடத்தல் புகார்கள் மற்றும் துணை சபாநாயகர் மீதான தாக்குதல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், முந்தைய ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போலவே தற்போதைய ‘மிஷினரி மாடல்’ ஆட்சியும் செயல்படுவதாகவும், இவற்றுக்கு மக்கள் உரிய முடிவு கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.