சேலம் செல்வதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துத் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகக் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைந்து ஆறு மாதங்களைக் கடந்த நிலையிலும், தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 40 கோடி ரூபாய் தொடர்பாகப் பேரம் பேசப்பட்டதாகவும், மறைமுகக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் துரை வைகோ கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய மதிமுக எம்பி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துப் பேசி கர்நாடக முதலமைச்சர் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது என அவர் சாடினார். நீர் மேலாண்மை அமைப்பு வழங்கிய தகவல்களைக் கூட கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றும், இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கேள்வி எழுப்புவதோடு, இரு மாநிலப் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் துரை வைகோ வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை எனச் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாக எந்தப் புகாரும் அளித்ததாகத் தெரியாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்துப் பேசிய துரை வைகோ, நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய முறைகேடுகளில் ஒன்றாகக் கருதப்படும் அளவிற்குப் பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அரசு தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேபோல் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தவறு செய்பவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
