தமிழ் சினிமாவில் 90 களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. திருச்சிராப்பள்ளியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நடிகரான டெல்லி குமாரின் மகன் ஆவார். இருப்பினும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்று படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த வயதில் சாக்லேட் பாய் தோற்றத்தில் இருந்த அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதன் பின்னர் அரவிந்த் சாமி ரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த படம் சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து பம்பாய் போன்ற சில சூப்பர் ஹிட் படங்களில் அவர் நடிக்க தொடங்கினார்.
இந்த படத்தை தொடர்ந்து இந்திரா, புதையல், மின்சாரக்கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் நடிப்பை விட்டு விட்டு முழு நேரமும் தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.
நடுவில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் கடல், தனி ஒருவன், செக்கச் சிவந்த வானம், போகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார், சினிமா மற்றும் பிசினஸ் இரண்டையும் பார்த்து வரும் அரவிந்த்சாமி சமீப காலமாக நடித்து வந்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் கமல்ஹாசனோடு நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது பற்றி பேசியுள்ளார். அதில் “தெனாலி படத்தில் ஜெயராம் வேடத்தில் நான்தான் நடிக்க வேண்டியிருந்தது. நல்ல வேளை நான் வேண்டாம் என்று சொன்னேன். ஜெயராம் சார் அதில் சூப்பராக நடித்துவிட்டார். அதே போல அன்பே சிவம் படத்தில் மாதவன் கதாபாத்திரத்திலும் நான்தான் நடிக்க வேண்டி இருந்தது. அது சில காரணங்களால் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
