தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி ஆண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தமிழக அரசின் 9,10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடைபெறும். ஒவ்வொரு வினாத்தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதமும் இரண்டாவது தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும். மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 26 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
