தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 40 இடங்களில் இந்த திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய நகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்களின் அடிப்படையில், பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
