“அய்யோ அம்மா வலிக்குது”…. 14 நிமிட நரகம்…. 2 வயது குழந்தையை 25 முறை கடித்துக் குதறிய சக குழந்தை… சிசிடிவியில் சிக்கிய டே கேர் கொடூரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் டே கேர் (Daycare) மையத்தில், ஊழியர்களின் அப்பட்டமான அலட்சியத்தால் 23 மாதக் குழந்தை ஒன்று சக குழந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 22ஆம் தேதி காலை ஊழியர்கள் யாரும் இல்லாத அறையில் மூன்று குழந்தைகள் மட்டும் தனியாக விடப்பட்டுள்ளனர். அப்போது, 2 வயது கூட நிரம்பாத ஒரு குழந்தை, அருகில் இருந்த மற்றொரு குழந்தையை முகம், கழுத்து, மார்பு மற்றும் கால்கள் என உடலின் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட முறை கொடூரமாகக் கடித்து, அங்கிருந்த பொருட்களைக் கொண்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. அருகில் இருந்த மற்றொரு குழந்தை தடுத்து நிறுத்த முயன்றும் பலனளிக்காத நிலையில், இந்த நெஞ்சைப் பிசையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை உலுக்கியுள்ளன.

சுமார் 14 நிமிடங்களுக்கும் மேலாக இந்தத் தாக்குதல் நீடித்தபோதிலும், அங்கு ஒரு பணியாளர் கூட வராதது டே கேர் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகே, குழந்தைக்கு ‘லேசான காயம்’ ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோரிடம் நிர்வாகம் பொய் கூறியுள்ளது. பதறியடித்து வந்த பெற்றோர், குழந்தையின் உடலெங்கும் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருக்க, பெற்றோருக்கு 10 லட்சம் ரூபாய் பணமும், 3 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வியும் தருவதாக டே கேர் நிர்வாகம் பேரம் பேசியதோடு, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என அராஜகமாகவும் மிரட்டியுள்ளது.

   

பெற்றோரின் உறுதியான புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டே கேர் மையத்தின் சிஇஓ (CEO), மேலாளர், முதல்வர் மற்றும் கேர் டேக்கர் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, விபத்து நடந்த அந்தத் தனியார் டே கேர் மையம் எவ்வித நகராட்சி அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்ததும் தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் விடுகிறோம் என்று நம்பி ஏமாறும் பெற்றோருக்கு, இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தையும், தனியார் காப்பகங்களின் தரம் மற்றும் கண்காணிப்பு குறித்த பலத்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.