தமிழக அரசியல் களத்தில் சமீப நாட்களாக அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நியமிக்கப்பட்டதன் பின்னணியில், தமிழக முதல்வர் விஜய் முக்கிய பங்காற்றியுள்ளார் என்ற பரபரப்பான தகவல் அரசியல் வட்டாரத்தை உலுக்கி வருகிறது. முன்னதாக தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகிலிருந்தே வலுத்து வந்தது. திமுக அரசுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டது, கூட்டணியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக நடந்த ‘ஸ்வீட் பாக்ஸ்’ விவகாரங்கள் என செல்வப்பெருந்தகைக்கு எதிரான அடுக்கடுக்கான புகார்கள் ராகுல் காந்தியின் மேஜைக்குச் சென்றன. இதன் விளைவாகவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க ராகுல் காந்தி இறுதி முடிவெடுத்தார்.
செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவர் பதவிக்கான ரேஸில் 5 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. இந்த வாய்ப்பைத் தனதாக்கிக் கொள்ள மாணிக்கம் தாக்கூர் தீவிர முயற்சியில் இறங்கினார். தனது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டையும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) – காங்கிரஸ் கூட்டணி அமைவதற்காகத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர் மேலிடத்தில் சாதகமாக முன்வைத்தார். ஆனால், இதற்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும், மூத்த நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மாணிக்கம் தாக்கூர் தெலங்கானா மாநிலப் பொறுப்பாளராக இருந்தபோது எழுந்த பண விவகாரங்கள் மற்றும் கட்சிப் பதவிகள் விற்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை ராகுல் காந்தியிடம் விவரித்து, அவரை நியமிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டனர்.
தமிழக மூத்த தலைவர்களான ப. சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோரின் எதிர்ப்பால் மாணிக்கம் தாக்கூரை நியமிக்கும் முடிவை ராகுல் காந்தி தற்காலிகமாகத் தள்ளி வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்கம் தாக்கூர், உடனடியாகத் தனது நெருங்கிய நண்பரும், முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்குமே அணுக்கமானவருமான ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்துகொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, உடனடியாக முதல்வர் விஜய்யைத் தொடர்புகொண்டு, “தலைவர் பதவிக்கு மாணிக்கம் தாக்கூர் நியமிக்கப்பட நீங்கள் ராகுல்ஜியிடம் ஒரு வார்த்தை பரிந்துரைத்தால் அது நிச்சயம் நடக்கும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து, முதல்வர் விஜய் உடனடியாக ராகுல் காந்தியைத் தொடர்புகொண்டு மாணிக்கம் தாக்கூருக்காகப் பேசியுள்ளார். தமிழக அரசியல் சூழல் மற்றும் தவெக – காங்கிரஸ் இடையேயான எதிர்காலக் கூட்டணி கணக்குகளை மனதில் வைத்து, விஜய்யின் அந்த முக்கிய சிபாரிசை ராகுல் காந்தியால் தட்ட முடியாமல் போனது. இதன் விளைவாகவே, கட்சிக்குள்ளே இத்தனை எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மாணிக்கம் தாக்கூரின் பெயர் மாநிலத் தலைவராக இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. “விஜய்யின் உபயத்தால்தான் மாணிக்கம் தாக்கூருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது” என காங்கிரஸ் எம்.பி.க்களே இப்போது ரகசியமாகப் பேசி வருவது தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
