தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் 2026 தேர்தல் களம் பரபரப்பாகி உள்ள நிலையில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் முயற்சியில் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி குமரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். எம்ஜிஆர் காலகட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் குமரி அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஏற்கனவே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் இணைந்து வருவது அதிமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
