தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக 10,545 பணியாளர்கள் மற்றும் 234 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தபால் வாக்குகளைத் துல்லியமாக எண்ணுவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு தனி மேஜை வீதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் உடனுக்குடன் பொது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளைப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்துகொள்ளப் பல்வேறு வசதிகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை ‘ECINET’ செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான results.eci.gov.in ஆகியவற்றின் மூலம் நேரலையாகப் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் எவ்விதத் தொய்வுமின்றி பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
