தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், தமிழக பாஜகவிலும் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வர டெல்லி தலைமை ஆலோசித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சூழலை எதிர்கொள்ளும் வகையில், துடிப்பான ஒரு இளம் தலைவரை மாநிலத் தலைவராக நியமிக்க பாஜக காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தனித்து களம் கண்ட பாஜக சுமார் 18 சதவீத வாக்குகளைப் பெற்று அசத்தியிருந்தது. ஆனால், இந்த முறை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட போதிலும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 2.97 ஆகக் குறைந்துள்ளது. கடந்த முறை 4 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜக, இம்முறை ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
தேசிய அளவில் மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பதால் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதனால் தமிழகத் தோல்வி டெல்லி தலைமையை பெரிதாக அசைக்கவில்லை என்றாலும், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் வீழ்ந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் உருவானதும், பின்னர் அங்கு பாஜக அசுர வளர்ச்சி அடைந்து தற்போது ஆட்சியைப் பிடித்ததும் போன்ற ஒரு அரசியல் பாணியை, தற்போதைய புதிய அரசியல் சூழ நிலவும் தமிழகத்திலும் செயல்படுத்த டெல்லி தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது திமுகவை ஆக்ரோஷமாக எதிர்த்து அரசியல் செய்தார். எனினும், அதிமுகவுடனான மோதல் போக்கு காரணமாக, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார். தற்போது நயினார் நாகேந்திரன் தலைமையிலும் கட்சி தோல்வியைச் சந்தித்திருப்பதால், மீண்டும் ‘மான்செஸ்டர்’ நகரைச் சேர்ந்த அந்த இளம் தலைவர் பக்கமே டெல்லியின் பார்வை திரும்பியுள்ளதாக அக்கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர். அவரும் தனக்கு மீண்டும் பதவி வரும் என்று ஆதரவாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல்மயப்படுத்தப்படாத இளம் வாக்காளர்களைக் கவர முடியும் என நம்பும் டெல்லி தலைமை, தமிழக பாஜகவின் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை அடுத்த சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகிறது.
