தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறார். கருநாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அவர், மிகக் குறுகிய காலத்தில் மாநிலத் தலைவரானார். ஊழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் திமுக அரசைத் தீவிரமாக எதிர்த்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றார். எனினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவர் அமைத்த கூட்டணி தோல்வியைத் தழுவியதும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், அண்ணாமலையின் பதவி விலகலுக்கு வழிவகுத்தன. கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து முழுமையாக விலகிய அவர், அன்றே ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பைத் தொடங்கினார்.
அமைப்பு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்த நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகிகளான கரு.நாகராஜன் போன்றவர்களும் அண்ணாமலையுடன் கைகோர்த்தனர். “50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே புதிய அரசியல் கட்சியை அறிவிப்பேன்” என்று அண்ணாமலை உறுதியாகத் தெரிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக, மது ஒழிப்பு மாநாடு, சுற்றுச்சூழல் மாநாடு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யும் பணிகள், மாரத்தான் போட்டிகள் எனச் சீமான் பாணியில் பல சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இருப்பினும், அமைப்பு தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் உறுப்பினர் சேர்க்கை 20 லட்சத்தைக் கூடத் தாண்டாமல் 19.48 லட்சம் என்ற அளவிலேயே முடங்கிக் கிடப்பது அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்குச் சிக்கலான ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைமுறையே முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது. செல்போன் எண், ஓடிபி, பெயர், வயது மற்றும் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் பதிவிட வேண்டியிருப்பதால், கிராமப்புற மக்களும் படிக்காதவர்களும் இதில் இணைய முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆதரவாளர்கள் பல இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தியும் இலக்கை எட்டுவதில் தொய்வு நீடிக்கிறது.
இந்த முடக்கத்தைச் சரிசெய்ய பாஜக பாணியில் ‘மிஸ்டு கால்’ முறை மூலம் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்போனில் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிய மக்களும் உடனடியாக அமைப்பில் இணைய முடியும் என்பதால், இதன் மூலம் எஞ்சியுள்ள இலக்கை விரைவாக எட்டிவிடலாம் என்று அவர் நம்புகிறார். 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற மைல்கல்லை எட்டி, திட்டமிட்டபடி அண்ணாமலையால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், புதிய தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல்…
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியாத சூழலில், தவெக தலைவர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதித்துவிட்டார்…
கொளத்தூர் தொகுதி பிரதிநிதி வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட போதிலும்,…
தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மாதாந்திர உதவித்தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5-ஆம் தேதிக்குள்…