இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘டாக் வித் தேவா’ என்ற கணக்கை நடத்தி வரும் இரு பள்ளி சிறுவர்கள், தங்களின் புதிய கீபோர்டை வாசித்து ஒரு க்யூட்டான வீடியோவை வெளியிட்டனர். அதில், “இசை உலகில் இரண்டு பேருக்குத்தான் போட்டி, ஒன்று அனிருத், மற்றொன்று எங்கள் அண்ணன்” என்று அவர்கள் விளையாட்டாகப் பேசியது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. இந்த வீடியோ இசையமைப்பாளர் அனிருத்தின் கவனத்திற்குச் செல்லும் வரை அவரது ரசிகர்கள் இதனைத் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
சிறுவர்களின் இந்த மழலைத்தனமான சவாலைக் கண்ட அனிருத், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, “சூப்பர் டா தம்பி, க்யூட்டீஸ்” என்று பாராட்டிப் பதிலளித்துள்ளார். ஜெயிலர் 2, கிங் எனப் பல மெகா பட்ஜெட் படங்களின் பணிகளில் படு பிஸியாக இருக்கும் அனிருத், நேரம் ஒதுக்கி சிறுவர்களின் வீடியோவிற்குப் பதிலளித்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. முன்னணியில் இருக்கும் ஒரு கலைஞர் குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவித்த இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
