தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களைத் தனது மனைவியுடன் தனிமையில் இருக்கச் செய்து, ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரானைட் தொழிலில் நஷ்டமடைந்த கணவர், தனது ஆடம்பர வாழ்க்கைக்காக மனைவியைச் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் போடச் சொல்லி, அதன் மூலம் வரும் ஆண்களை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் தனிமையில் இருக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்து, பின்னர் அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கரீம்நகர் கிராமப்புற போலீசார் இந்த மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த நபரிடமிருந்து ஏற்கனவே 14 லட்சம் ரூபாய் பறித்த இந்தத் தம்பதியினர், மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால் அவர் காவல் நிலையத்தை நாடியுள்ளார். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த சொகுசு கார், மொபைல் போன்கள் மற்றும் காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
