மத்திய அரசு கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘பிஎம் விஸ்வகர்மா’ என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தையல்காரர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், கொல்லர்கள் மற்றும் கொத்தனார்கள் உள்ளிட்ட 18 வகையான பாரம்பரியத் தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறலாம். தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பிணையின்றி முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாயும், அதனைச் சரியாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு இரண்டாம் கட்டமாக இரண்டு லட்சம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் வரை மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
நிதி உதவியுடன் மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளையும் இத்திட்டம் இலவசமாக வழங்குகிறது. பயிற்சியில் பங்கேற்கும் காலங்களில் கைவினைஞர்களுக்குத் தினசரி 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். ஆனால், இச்சலுகை கைகளால் வேலை செய்யும் சிறுதொழில் கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், தனியார் மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் இதில் விண்ணப்பிக்க முடியாது. பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், கலைஞர்களைத் தன்னிறைவு அடையச் செய்யவும் இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
