பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவர் ராமதாஸ் மயக்கமடைந்த நிலையில், அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தந்தை உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புவோர் மீது ஆவேசம் அடைந்த அன்புமணி, இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு எதாவது என்றால் ராமதாஸுடன் இருப்பவர்களை சும்மா விடமாட்டேன் என அன்புமணி எச்சரித்துள்ளார். தந்தையும், மகனும் தனித்தனி அணியாக பிரிந்து இருந்தாலும், ராமதாஸ் மயங்கி விழுந்த செய்தி கேட்டு அன்புமணி சக நிர்வாகிகளிடம் இவ்வாறு கூறினார்.
