பென்னாகரம் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், தனது முன்னாள் சகாவான ஜி.கே.மணி மற்றும் அவரது மகன் தமிழ்குமரனை மிகக்கடுமையாகச் சாடினார். பாமக நிறுவனர் ராமதாஸின் அணியிலிருந்து பிரிந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழ்குமரனை ‘உதயநிதியின் அடிமை’ என விமர்சித்த அவர், பல ஆண்டுகளாகப் பாமகவில் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு இப்போது துரோகம் செய்வதாகக் குற்றம் சாட்டினார். ஜி.கே.மணி குடும்பத்தினர் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாகப் பகிரங்கமாகப் புகார் வாசித்த அன்புமணி, சொந்த லாபத்திற்காகவே அவர்கள் எதிரணியில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குப் பென்னாகரத்தில் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில், வெறும் பிழைப்புக்காக அங்குக் களமிறங்கியுள்ளதாகக் கேலி செய்த அன்புமணி, தனது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி மீண்டும் திமுக ஆட்சியை அமைக்கச் சதி நடப்பதாகக் கூறினார். தருமபுரி மண்ணில் கை சின்னத்திற்கு இடமில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் இம்முறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். பாமகவில் ஏற்பட்ட இந்தத் தலைமை மாற்றத்தைப் பொறுக்க முடியாமல் ஜி.கே.மணி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதாகவும், மக்கள் துரோகிகளுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாக முழங்கினார்.
