மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக துணைத்தலைவர் குஷ்பு, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டும் எனச் சாடினார். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் பெண்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் திமுக அரசியல் நாடகம் ஆடுவதாகவும், அக்கட்சியில் ஆணாதிக்க மனோபாவம் மேலோங்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசின் தோல்விகளை மறைக்கவே தேவையற்ற போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாக அவர் விமர்சனம் செய்தார்.
மேலும், தனது கணவர் சுந்தர்.சி எழுப்பிய புகார்களுக்குப் பிறகே சாலைகளும் தெருவிளக்குகளும் அவசரகதியில் சீரமைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் செய்யாத மாற்றத்தைச் சுந்தர்.சி வெறும் பத்து நாட்களில் செய்துள்ளதாகப் பாராட்டினார். தற்போதைய எம்.எல்.ஏ மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கள நிலவரம் சுந்தர்.சிக்குச் சாதகமாக இருப்பதால் வரும் தேர்தலில் அவரது வெற்றி உறுதி என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்தார். நீண்டகால மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிய திமுகவிற்கு இந்தத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
