சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி… பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த அன்புமணி…. கூட்டணியை விட்டு வெளியேறத் தயார்…. பரபரப்பு பின்ணணி…!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, உட்கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாமகவின் முழுமையான அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார் அன்புமணி ராமதாஸ். மீண்டும் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவர், தன் மனைவி சௌமியா அன்புமணியை மத்திய அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லி பாஜக தலைமை இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால், அன்புமணி கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிருப்தியின் பின்னணியிலேயே, காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தைக் கையில் எடுத்து அன்புமணி தீவிரமாக களமிறங்கியுள்ளார். “மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்று ராகுல் காந்தி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்; தவறினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து பாமக வெளியேறும்” என அவர் திடீரென அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சிக்கு விடப்பட்ட சவாலாகத் தோன்றினாலும், உண்மையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதற்குக் காரணம் தேடும் ஒரு தந்திரமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

   

சௌமியா அன்புமணியின் அரசியல் நகர்வுகளுக்கு பாஜக உடனான கூட்டணி ஒரு தடையாக இருப்பதாகக் கருதும் அன்புமணி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு, காவிரி விவகாரத்தைக் காரணமாக்கி என்டிஏ கூட்டணியில் இருந்து முறைப்படி விலகி, தவெகவை நோக்கி நகர்வதே அன்புமணியின் தற்போதைய திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே காரணம் என்ற எண்ணத்தில் உற்சாகமாக இருக்கும் பாமக தொண்டர்களும் சௌமியா அன்புமணியை அமைச்சரவையில் காண்பதையே ஒரே இலக்காகக் கொண்டுள்ளனர்.

   

இருப்பினும், தவெக கூட்டணியில் பாமக இணைவது அத்தனை சுலபமானதாக இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தவெக நல்ல நட்புறவைப் பேணி வரும் சூழலில், பாமகவை கூட்டணியில் இணைப்பது தவெகவிற்கே மிகப்பெரிய அரசியல் சிக்கலை உருவாக்கக்கூடும். இத்தகைய பல்வேறு சவால்களுக்கு மத்தியில், சௌமியா அன்புமணியின் மத்திய அமைச்சர் பதவியைக் குறிவைத்து அன்புமணி நகர்த்தும் காய்கள் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன.