திமுக விரைவில் பெரிய அளவிலான உட்கட்சி மாற்றங்களும் மறுசீரமைப்புகளும் நிகழவிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் கட்சித் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், கனிமொழி எம்பி-க்கு ‘முதன்மை துணைப் பொதுச்செயலாளர்’ என்ற புதிய உயர் பொறுப்பை வழங்குவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் முக்கிய மூத்த தலைவர்கள் சிலருக்கு இந்த துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், திமுகவின் அடுத்தகட்ட தலைமையாக உதயநிதி ஸ்டாலின் மிக வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறார். அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தியது கட்சிக்குள்ளும் வெளியிலும் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. எம்பிக்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்திய நிலையில், எம்எல்ஏக்கள் கூட்டத்தை உதயநிதி நடத்தியதும், தஞ்சையில் நடைபெறவுள்ள முக்கியப் போராட்டத்தை உதயநிதி தலைமையேற்று நடத்தவிருப்பதும், கட்சியின் முழுமையான கட்டுப்பாடு படிப்படியாக அவர் கைக்குச் செல்வதையே காட்டுகிறது.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு வழங்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்ட போதிலும், மூத்த தலைவர் துரைமுருகன் அப்பொறுப்பில் நீடிக்கவே விரும்புவதால் கனிமொழி தரப்பு அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில் துரைமுருகனை நேரில் சந்தித்து கனிமொழி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம், இரு தரப்பிற்கும் இடையேயான முரண்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, கனிமொழியின் முக்கியத்துவத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்ள ‘முதன்மை துணைப் பொதுச்செயலாளர்’ எனும் புதிய பொறுப்பை அவருக்கு உருவாக்க தலைமை முடிவு செய்துள்ளது.
இத்தகைய நகர்வுகள் மூலம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையிலான உறவு மேலும் பலப்பட்டு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இருவரும் இணைந்து தீவிரமாகச் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் திமுக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் இந்த அதிரடி மாற்றங்கள், தமிழக அரசியலிலும் திமுகவின் உட்கட்சி அமைப்பிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
