பாமகவை சொந்தம் கொண்டாடுவதில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அன்புமணி தரப்பினர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைந்துள்ளதாக அறிவித்தனர். ஏற்கனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்த கூட்டணி தொடர்பாக ராமதாஸின் கருத்து என்ன என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை. அன்புமணி யாருடன் சேர்ந்தாலும் அவர்களுக்கு பாமகவினர் உட்பட யாரும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனென்றால் தந்தைக்கு துரோகம் செய்த, தந்தையிடமிருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
நேற்று நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகின்றார் என்று மக்கள் பேசுவதை கேட்க முடிகின்றது. பாமக சார்பாக கூட்டணி பேசியது என்பது நேற்று நடந்த கூத்து. கூட்டணி பேச்சு வார்த்தை என்பது நீதிமன்ற அவமதிப்பு. என்னுடைய தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைகின்ற கூட்டணி தான் வெற்றி பெறும். நான் சேரும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். பாமகவை உரிமை கொண்டாட அன்புமணிக்கு தகுதி இல்லை. எதிர்ப்புகளை மீறி மத்திய அமைச்சராகிய தனக்கே அன்புமணி வேட்டுவைத்து விட்டதாக ராமதாஸ் பேசியுள்ளார்.
