தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக – பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. பாமக தற்போது இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான தரப்பையும் அதே கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பாமகவின் முழுமையான வாக்குகளைப் பெற்று வடதமிழகத்தில் வலுவான வெற்றியைப் பதிவு செய்ய இக்கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூட்டணி உடன்படிக்கையின்படி, அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு 18 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், ராமதாஸ் தலைமையிலான அணி கூட்டணியில் இணையும் பட்சத்தில், அவர்களுக்கு கூடுதலாக 6 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. பாமகவின் இரு பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஒரே கூட்டணியில் நிலைநிறுத்துவது 2026 தேர்தல் களத்தில் ஒரு முக்கிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
