பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில், அக்கட்சியின் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக அரசு தமிழக இளைஞர்களை போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிவிட்டதாகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். எட்டாம் வகுப்பு மாணவர் கூட கஞ்சா பயன்படுத்தும் அவலநிலை உருவாகியுள்ளதாகவும், அடுத்த தலைமுறையைச் சீரழிக்கும் இந்த ‘கேடுகெட்ட’ ஆட்சியை 2026 தேர்தலில் மக்கள் வேரோடு அகற்ற வேண்டும் என்றும் அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
அரசியல் ரீதியாக திமுக பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுவதாக விமர்சித்த அன்புமணி, வன்னியர்களும் பட்டியல் சமூக மக்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம் என்றார். பாமகவிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கியதே திமுகதான் என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறிவிடக் கூடாது, அவர்கள் கடைசிவரை கூலித் தொழிலாளிகளாகவே இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பதாகவும், சமூக நீதி பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை என்றும் சாடினார்.
அரசின் நிர்வாகத் திறமை குறித்துப் பேசிய அவர், மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெயரளவுக்கே அமைச்சராக இருப்பதாகவும், உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜிதான் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். “மாப்பிள்ளை இவர்தான், ஆனால் சட்டை என்னுடையது” என்ற நகைச்சுவை பாணியில் மின்சாரத் துறையின் நிலை இருப்பதாகக் கூறிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதிக்கு எதிரானவர் என்பதை அண்டை மாநிலங்களின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஒப்பிட்டார்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து எச்சரித்த அன்புமணி ராமதாஸ், திமுகவினர் கூப்பன் முறையை வைத்து மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகக் கூறினார். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுக கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும் திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தால் மக்களுக்குப் பண உதவியும், வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
