டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் ஆவார். ஒரு சில குணச்சித்திர நடிகர்கள் படம் முழுவதும் முக்கியமான இடத்தை பிடித்து அவர்கள் நடிப்பினால் மக்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்துவர். மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர் தான் டெல்லி கணேஷ். தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர் டெல்லி கணேஷ்.
படிப்பை முடித்த டெல்லி கணேஷ் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றினார். அந்த நேரத்திலேயே இவர் தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் தில்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அதனாலேயே இவர் பெயர் டெல்லி கணேஷ் என்று ஆனது. விமானப்படையில் நல்ல ஒரு வேலை இருந்த போதும் டெல்லி கணேசுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் தனது விமானப்படை வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்காக வந்தார் டெல்லி கணேஷ்.
1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் டெல்லி கணேஷ். இவரை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் துணை நடிகர் நகைச்சுவை நடிகர் குணச்சித்திர வேடங்கள் என பல தரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர். வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். கமலஹாசனுடன் இணைந்து இவர் அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களில் பாத்திரங்களில் இவர் நடித்தது மெகா ஹிட் ஆனது.
1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார் டெல்லி கணேஷ். இது மட்டும் அல்லாமல் கலைமாமணி விருதையும் வென்று இருக்கிறார். 1977 முதல் இன்றளவும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக திரை உலகில் நடித்து வருகிறார் டெல்லி கணேஷ்.
வெள்ளி திரையில் மட்டுமல்ல அது சின்னத்திரையில் பிரபலமான எட்டு தொடர்களில் நடித்து புகழ் பெற்றார் டெல்லி கணேஷ். வயது மூப்பு ஆனாலும் கூட அவ்வப்போது சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். 80 வயது ஆன போதும் ஆக்டிவாக நடித்து வந்த டெல்லி கணேஷ் தற்போது உடல்நல குறைவினால் காலமாகி இருக்கிறார். இந்த செய்தி திரையுலகை சற்று அதிர்ச்சியடைய தான் வைத்திருக்கிறது.