திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (32) தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி சத்யா (26). இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி எல்லை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார், இந்த நிலையில் நேற்று மதியம் சத்யாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. வலியால் கதறிய சத்தம் அக்கம்பக்கத்தில் உள்ளோர் கஜேந்திரனிடம் தகவல் தெரிவித்தனர்.
மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கொசுவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, மற்றும் கோபால்பட்டி அரசு மருத்துவர் பிவின் ஆரோன் மற்றும் டாக்டர் சந்தானக்குமார், செவிலியர், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குமரேசன், வேம்பார் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் கஜேந்திரன் வீட்டிற்கு முன்பு குவிந்தனர். பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தினர். ஆனால் வீட்டின் கதவு ஜன்னல்களை மூடிக்கொண்டு தம்பதி இருவரும் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்தனர்.
மாலை 6.30மணி அளவில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டது அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர்கள் கதவைத் திறக்கச் சொல்லியும் திறக்காததால் 7மணி வரை காத்திருந்தனர். ஒரு 7 மணி அளவில் கதவைத் திறந்துள்ளார் கஜேந்திரன். சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது, டாக்டர்கள் பரிசோதித்து தாயும் சேயும் நலம் என்று தெரிவித்தனர். கஜேந்திரனை பிடித்து விசாரித்ததில் அவர் வீடியோ கால் மூலம் யாரிடமோ ஒருவரிடம் கேட்டு மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக தெரிவித்தார். சம்பவத்தைப் பற்றி சுகாதாரத்துறையினர் கலெக்டரிடம் கூறினர். சம்பவத்தைப் பற்றி நடவடிக்கை எடுக்க கோரி சுகாதாரத்துறையினரிடம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கஜேந்திரன் வீட்டருகே ஆம்புலன்ஸ் முன்னெச்சரிக்கை உடன் நின்று கொண்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
