AI நிறுவனங்கள் தங்களின் சாட்பாட்களுக்கு பயிற்சி அளிக்க லட்சக்கணக்கான புத்தகங்களை வாங்கி, அவற்றை ஸ்கேன் செய்த பிறகு துண்டு துண்டாக வெட்டி அழித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பு: Anthropic நிறுவனம் ‘Project Panama’ என்ற ரகசிய திட்டத்தின் மூலம் Strand Book Store, libraries போன்ற இடங்களிலிருந்து 5 லட்சம் முதல் 2 மில்லியன் புத்தகங்கள் வரை வாங்கி, அவற்றின் பைண்டிங்குகளை மெஷின் கொண்டு அறுத்து, ஸ்கேன் செய்த பின் மறுசுழற்சிக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூகுளின் முன்னாள் அதிகாரியான டாம் டர்வே என்பவரின் தலைமையில் இத்திட்டம் செயல்பட்டதாகவும், இணையத்தில் உள்ள தரமற்ற எழுத்துக்களை விட புத்தகங்களில் உள்ள உயர்தர மொழியை AI மாடல்களுக்குக் கற்பிக்கவே இத்தகைய விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சையில் Anthropic மட்டுமல்லாமல் பிற முன்னணி நிறுவனங்களும் சிக்கியுள்ளன. Meta நிறுவனத்தின் ஊழியர்கள் ‘LibGen’ போன்ற சட்டவிரோத தளங்களில் இருந்து மில்லியன் கணக்கான புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து பயிற்சி அளிக்க விவாதித்ததும், OpenAI இதை ஒப்புக்கொண்டு பின்னர் நீக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் இது தொடர்பான காப்புரிமை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருட்டுப் பிரதிகளைப் பயன்படுத்திய விவகாரத்தில் சட்டப்பூர்வப் பொறுப்புகளைச் சமாளிக்க Anthropic நிறுவனம் $1.5 பில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. AI ரேஸில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டியில், நூல்களையே அழிக்கும் அளவுக்கு நிறுவனங்கள் சென்றுள்ளது உலகளவில் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
புத்தகங்கள் அழிக்கப்பட்டு தரவுகள் அனைத்தும் AI நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும்போது, எதிர்காலத்தில் தகவல்களுக்கு நாம் முழுமையாக அவற்றையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். AI தவறான அல்லது மாற்றப்பட்ட வரலாற்றுத் தகவல்களை வழங்கினால், அதைச் சரிபார்க்க நம்மிடம் மூலப் புத்தகங்கள் இல்லாத நிலை உருவாகி வரலாற்றுப் பிழைகளுக்கு வழிவகுக்கும். மனித மூளையின் சிந்தனைத் திறனைக் குறைத்து, அறிவை AI-யிடம் அடகு வைக்கும் நிலைக்கு இது நம்மைக் கொண்டு சேர்க்கும். எனவே, எந்தவொரு தகவலுக்கும் AI-யை மட்டுமே நம்பியிருக்காமல், நாமே சுயமாகத் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வது தற்போதைய அவசிய தேவையாகிறது.
