தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மாதாந்திர உணவுப் படித் தொகையை உயர்த்தி அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கிராமப்புறங்கள் மற்றும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளில், விலையேற்றத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்துமிக்க மற்றும் உயர்தரமான உணவை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி விடுதி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உணவுப் படித் தொகை ரூ,1,400-ல் இருந்து ரூ.1,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் உயர்கல்வி விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கான மாதாந்திரத் தொகை ரூ,1,500-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதி உயர்வால் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் மேம்படுவதோடு, காய்கறிகள், பால் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைத் தடையின்றி வழங்க வழிவகை ஏற்படும். அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கை விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
