தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இபிஎஸ் 2026 தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் நேற்று பாமகவும் அவருடன் கூட்டணியில் இணைந்தது. மேலும் பல கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ள நிலையில் புதிய தமிழகம் கட்சியும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளது.
இதனிடையே மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று பட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாச்சாரம் முடிக்கப்பட வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற பேச்சை எடுத்துள்ளது இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
