தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
இடையில் 2003 மற்றும் 2005க்கு இடையில் அஜித்துக்கு மோசமான காலகட்டமாக அமைந்தது. அப்போது அவர் நடித்த எந்த படமும் ஹிட்டாகவில்லை. ஆனால் பில்லா என்ற ஹிட் படத்தைக் கொடுத்து கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் என சூப்பர் ஹிட்கள் கொடுத்து டாப் 3 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
அஜித் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். அதில் எந்த படத்திலும் அவர் கதை விஷயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது இல்லை. ஆனால் அசல் படத்தில் மட்டும் அவர் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குனர் சரணுடன் இணைந்து எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் இணை இயக்குனராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஆனால் அந்த படம் ஹிட்டாகாத காரணத்தால் தொடர்ந்து அவர் அதுபோன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை எனத் தெரிகிறது.