“வெளியே போனால் பதவி காலி” அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ‘சீல்’ வைத்த எடப்பாடி… தவெக-வின் ஆப்ரேஷனை முறியடிக்க அதிரடி பிளான்..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எப்படியாவது ஆட்சியமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்ட தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக-விற்கு, இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தவெக தரப்பிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்குப் பெரும் தொகை பேரம் பேசப்படுவதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை தனது எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு ரகசிய சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். குதிரை பேரத்தைத் தவிர்த்து, தங்கள் கட்சி உறுப்பினர்கள் அணி மாறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

   

 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளிடம் தூது விட்டு வரும் வேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகின்றன. ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? தவெக பெரும்பான்மையை நிரூபிக்குமா? அல்லது தமிழகத்தில் மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.