தூக்கி எறியப்படும் ஐடி டிகிரி… அமெரிக்காவில் மாதத்திற்கு ரூ.22 லட்சம் சம்பாதிக்கும் எலக்ட்ரிஷியன்கள்…. ஏஐ உருவாக்கிய அதிர்ச்சி திருப்பம்…!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சி உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் பல மணி நேரம் கடினமாகச் செய்யும் வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் சில வினாடிகளில் முடித்துவிடுவதால், ஐடி துறையில் வரலாறு காணாத ஆட்குறைப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய 1,20,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக, நிறுவனங்களின் ஆரம்ப நிலை மற்றும் இடைநிலை மென்பொருள் பொறியாளர்களின் பணிகளை ஏஐ மிக எளிதாகக் கையாள்வதால், ஐடி துறையின் வேலைவாய்ப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஏஐ தொழில்நுட்பம் சீராக இயங்குவதற்குப் பிரம்மாண்டமான ‘தரவு மையங்கள்’ (Data Centers) தேவைப்படுகின்றன. இந்த டேட்டா செண்டர்களில் உள்ள கணினி சாதனங்கள் மற்றும் சர்வdownகளைத் தடையில்லாமல் இயக்க அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், தடையில்லா மின் துணை நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அமைக்கப் பயிற்சி பெற்ற எலக்ட்ரிஷியன்கள், வெல்டர்கள் மற்றும் தச்சர்களுக்கான தேவை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மென்பொருள் பொறியாளர்களைக் காட்டிலும் தொழிற்கல்வி நிபுணர்களுக்குச் சந்தையில் புதிய மவுசு உருவாகியுள்ளது.

   

குறிப்பாக அமெரிக்காவில் இந்தத் தேவையின் காரணமாக எலக்ட்ரிஷியன்களின் ஊதியம் பெருமளவில் உயர்ந்துள்ளது. அங்குத் திறமையான எலக்ட்ரிஷியன்களுக்கு இந்திய மதிப்பில் மாதத்திற்கு ரூ.22 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது பல ஏஐ இன்ஜினியர்களின் ஊதியத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டா செண்டர் கட்டுமான பணிகளுக்கு அதிக அளவிலான தொழிலாளர்கள் சென்றுவிடுவதால், வீடு மற்றும் மருத்துவமனை கட்டுமானத் துறைகளிலும் மின்சார வலையமைப்புகளிலும் கடும் ஆட்குறைபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் கூடுதலாக 1.30 லட்சம் எலக்ட்ரிஷியன்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

   

அமெரிக்காவில் தொடங்கியுள்ள இந்த அலை, விரைவிலேயே இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று தொழில்முறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், பெருநகரங்களில் புதிய தரவு மையங்கள் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், கணினி திரையின் முன் அமர்ந்து பணியாற்றும் பொறியாளர்களை விட, களத்தில் இறங்கிச் செயல்படும் எலக்ட்ரிஷியன்கள், பிட்டர்கள் மற்றும் உள்கட்டமைப்புத் தொழிலாளர்களுக்கே வரும் காலத்தில் இந்தியாவில் அதிக வரவேற்பும், அதிக ஊதியமும் கிடைக்கக்கூடும்.