தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தவெக, திமுக, அதிமுக என முக்கோணப் போட்டியால் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதிகள் நெருங்கும் வேளையில், பிரச்சாரப் பணிகளும் வியூகங்களும் வேகம் எடுத்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலுமே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதிய மற்றும் சமூக ரீதியிலான வாக்கு வங்கியே மிக முக்கியப் பங்காற்றும் என்பதால், அனைத்துக் கட்சிகளுமே தீவிரக் கணக்குகளைப் போட்டு களமிறங்கியுள்ளன.
ஆளும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த நாள் முதல், தலித் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்களுக்கு இடம் அளித்திருப்பதை கட்சித் தலைவர் விஜய் பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்த நிலையில், அதற்கு தலித் மக்களிடையே பரவலான வரவேற்பும் கிடைத்தது. இருப்பினும், இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக வாக்குகளும் அதிகளவில் உள்ளன. பாமக இத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளது தவெகவுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டாலும், அப்பகுதிகளின் பெரும்பான்மைச் சமூக வாக்குகளைக் கவர தவெக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்தச் சூழலில், சமூக ரீதியிலான வாக்குகளைக் அறுவடை செய்ய ஆளுங்கட்சியான தவெக தனது கூட்டணிக் கட்சியான விசிகவை பிரச்சாரக் களத்தில் சற்று தள்ளி வைப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் மேடையேற மேற்கொண்ட முயற்சிகளுக்கு விஜய் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தவெகவின் தலைமை பிரச்சார வாகனத்திலோ அல்லது வேட்பாளர்களின் பிரச்சார வாகனங்களிலோ விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டப்படவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கூட்டணியில் இருந்தபோதிலும், விசிகவை தவெக திட்டமிட்டே ஒதுக்கி வைக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விசிக தாமாகவே முன்வந்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அந்தக் கூட்டங்களிலும் தவெகவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பெரும்பான்மைச் சமூகங்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே, விசிகவை பிரச்சாரத்தில் பெரியளவில் முன்னிறுத்தாமல் தவெக விலகியே இருக்கிறது என்ற பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
