சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டிக்காமல் அமைதி காக்கும் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். மேலும், அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும், அதில் கட்சி வளர்ச்சி மற்றும் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
கடந்த கால தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தோல்விக்கான காரணங்களை ஆராய உடனே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்ற மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்தி காரணமாக சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்று முகாம்களுக்குச் சென்றது அதிமுக தொண்டர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது. மேலும், அண்மையில் விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் எழுந்த மோதல்களும், பதவி பறிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகளின் மனக்கசப்புகளும் கட்சியில் பெரும் புயலைக் கிளப்பின.
இந்நிலையில், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தற்போது முன்வந்துள்ளார். இதனால் விரைவில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும், தலைமை மாற்றக் கோரிக்கைகள் எழுப்பப்படுமா அல்லது உட்கட்சிப் பிளவுகளைச் சரிசெய்யும் வகையில் சமரசத் தீர்வுகள் எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது
