“நம்ம பொருளை வாங்கிட்டு ஓட்டு அவருக்கு போட்டீங்களா?”… திமுக நிர்வாகிகளை வெளுத்து வாங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சையைக் கைப்பற்றியுள்ளது, மாநில அரசியலில் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித பலமான கட்சி கட்டமைப்பும் இன்றி, களம் கண்ட முதல் தேர்தலிலேயே தவெக ஆட்சியைப் பிடித்துள்ளதை பார்த்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இந்தச் சூழலில், தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில் நடைபெற்ற திமுக பேரூர், வார்டு மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கூட்டத்தில் ஒவ்வொரு பூத் வாரியாக திமுக, தவெக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் பெற்ற வாக்குகள் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு குறிப்பிட்ட பூத்தில் திமுகவை விட தவெக கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பது தெரியவந்தது. அங்கு தவெக 168 வாக்குகளும், திமுக 138 வாக்குகளும் பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த அவர், “அதிமுக, பாஜக சேர்ந்து வாக்குகள் வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், புதிதாக வந்த தவெகவுக்கு 168 வாக்குகள் செல்ல என்ன காரணம்? பொறுப்பாளர்களாகிய நீங்கள் சரியாகப் பணியாற்றவில்லையா? நமக்கு ஏன் வாக்குகள் குறைந்தது?” என நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

   

இதற்குப் பதிலளித்த திமுக நிர்வாகிகள், “நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று பேசியுள்ளோம். தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளோம். ஆனால், மக்கள் சினிமா கவர்ச்சியைப் பார்த்து தவெகவுக்கு வாக்களித்துவிட்டார்கள்” என்று விளக்கம் அளித்தனர். நிர்வாகிகளின் இந்தப் பதிலும் அனிதா ராதாகிருஷ்ணனை திருப்திப்படுத்தவில்லை. மாறாக மேலும் கோபமடைந்த அவர், “நமக்கு வாக்களிக்க மாட்டோம் என்று முடிவெடுப்பவர்கள், நாம் கொடுக்கும் எதையும் வாங்காமல் இருக்க வேண்டியதுதானே? இப்போது வராத வாக்குகள் அடுத்து வரும் உள்ளாட்சி அல்லது கவுன்சிலர் தேர்தலில் மட்டும் எப்படி நமக்கு வரும்?” என்று நிர்வாகிகளிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

   

அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. தேர்தல் களத்தில் திமுக தரப்பில் பணமும் பரிசுகளும் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டதை, அக்கட்சியின் மூத்த தலைவரான அனிதா ராதாகிருஷ்ணனே சுயவாக்குமூலமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.