நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போன நிலை, அக்கட்சியின் தலைமைகளிடையேயும் நிர்வாகிகளிடையேயும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரக்தியடைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். மாற்றுக்கட்சியில் இருந்து வரும் மூத்த தலைவர்களுக்குத் தவெக தலைமை முன்னுரிமை வழங்கி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய தூண்கள் சரிந்து தவெக பக்கம் சாயத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த பல மூத்த தலைவர்களுக்கு உடனடியாக உயர்பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன், வளர்மதி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தவெகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன் மற்றும் குமரன் ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தாவல்களில் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வாக, பொள்ளாச்சி முன்னாள் எம்.பி-யும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சி. மகேந்திரனின் நியமனம் பார்க்கப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் தவெகவில் இணைந்த மகேந்திரனுக்கு, அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்குள்—அதாவது இரவு 6.50 மணிக்கே—திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த ஒரே மணி நேரத்தில் அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரனுக்காகவே திருப்பூர் மாவட்ட தவெக கட்டமைப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருப்பூரில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் செயல்பட்டு வந்த நிலையில், மடத்துக்குளம் தொகுதியை மட்டும் உள்ளடக்கி ‘திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம்’ புதிதாக உருவாக்கப்பட்டு மகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பேரன் மிதிலேஷுக்கும் மகேந்திரனின் மகளுக்கும் இடையே திருமணம் நடந்ததன் மூலம் இருவரும் சம்பந்தி உறவுமுறையானவர்கள். மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர் வேலுமணியின் ஆதரவாளராகவும் மகேந்திரன் பார்க்கப்படுகிறார்.
சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் செங்கோட்டையன் பின்னணியில் இருந்தே இந்த அரசியல் நகர்வுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த மகேந்திரனை, செங்கோட்டையன் மூலமாகவே விஜய் தனது தவெகவிற்கு ஈர்த்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தளமான கொங்கு மண்டலத்தில் அவருக்கு எதிராகக் கடுமையான மற்றும் பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
