2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்குகளை அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமணன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன்படி, தவெக மொத்தமாக 19 கோடியே 80 லட்சம் ரூபாயை மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டுள்ளது. திமுக சுமார் 197.80 கோடி ரூபாயும், அதிமுக 112.40 கோடி ரூபாயும் செலவிட்டுள்ள நிலையில், ஆளும் திமுகவின் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே (10%) செலவு செய்து தவெக களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் தவெக நேரடியாக போட்டியிட்டது; சேலத்தில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது. தேர்தல் முடிவுகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து அமைச்சரவையையும் அமைத்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட கணக்கின்படி, தேர்தல் அறிவிப்பின் போது கட்சியிடம் 3 கோடி ரூபாய் கையிருப்பு இருந்ததாகவும், தேர்தல் காலத்தில் 7 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தச் செலவில் ஒரு பகுதியான 19 கோடியே 40 லட்சம் ரூபாய் பிரச்சாரத்திற்காகவும், அதில் அச்சு, மின்னணு மற்றும் வானொலி விளம்பரங்களுக்காக 6 கோடியே 30 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. கட்சியின் முதல்வர் வேட்பாளரான விஜயின் ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்களுக்காக மட்டும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரை TAI Jets, Chipsan Aviation மற்றும் Fly High Global ஆகிய நிறுவனங்களுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளின் பிரச்சாரத்திற்காக சுமார் ரூ.40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை பேரணிகளுக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், பிரசாரப் பொருட்களுக்கு 40.50 லட்சமும், ஆதவ் அர்ஜுனாவின் Voice of Common Strategic Consulting நிறுவனத்திற்கு 1.79 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேட்பாளர்களுக்கான நேரடிச் செலவு மற்றும் சமூக வலைதள மெய்நிகர் பிரச்சாரத்திற்கான செலவுக் கணக்குகள் இதில் குறிப்பிடப்படவில்லை. இதனால் வேட்பாளர்களே தங்கள் சொந்தச் செலவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறைந்த செலவில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்திருப்பது தவெகவின் தேர்தல் வியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
