தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார்.
அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின. ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது. ஷகீலா பல நேர்காணல்களில் தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் தன்னுடைய உறவினர்கள் ஏமாற்றிவிட்டனர் என சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய உறவினர்கள் ஒரு திருமண வீட்டில் தான் எப்படி அவமானப்படுத்தப் பட்டோம் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் என்னுடைய அக்கா மகன் திருமணத்துக்கு ஆசையாகப் பரிசு வாங்கி சென்றேன். அவனை நான்தான் படிக்க வைத்தேன். ஆனால் நான் வந்தால், மணமேடையில் இருக்கமாட்டேன் என சொல்லி அந்த மணப்பெண் கீழே இறங்கிவிட்டார்.நான் மேடையேறும் போது அவர் இல்லாததால் பாத்ரூமுக்கு சென்றிருப்பார் என நினைத்தேன்.
காத்திருந்துவிட்டு பின்னர் கீழே இறங்கி அமர்ந்தேன். அப்போதுதான் அந்த பெண் மணமேடைக்கு வந்தார். நான் மேலே சென்று பரிசை வழங்கிய போது என் அக்கா மகன் என் முகத்தைக் கூடப் பார்க்காமல் பரிசை வாங்கி வைத்துக் கொண்டான். அவன் மனைவிக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. எனக்கு அந்த இடத்திலேயே அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினேன்” எனக் கூறியுள்ளார்.