சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி,பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் பயணித்துள்ளார். அவர் பாடிய பாடல்களே 400க்கும் மேல் இருக்கும். அதில் பல பாடல்கள் ரசிகர்களால் நெக்குருகி ரசித்துக் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் பாடி இன்றளவும் கொண்டாடப்படும் ‘ஜனனி ஜனனி’ பாடல் பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “அந்த பாடலை ரெக்கார்ட் செய்யும் அன்று ஜேசுதாஸைதான் பாடவைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் அன்று ஊரில் இல்லை. அதனால் நான் முதலில் பாடிவிட்டு பின்னர் அவரை வைத்து ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் என்றேன். ஆனால் தயாரிப்பாளரோ ‘என்ன இருந்தாலும் ஜேசுதாஸ் பாடுறது மாதிரி இருக்குமா?’ எனக் கேட்டார். ஆனால் நான் பாடும்போதே அங்கிருந்த இசைக் கலைஞர்கள் எல்லோரும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அன்று நான் பாடவில்லை. தாய் மூகாம்பிகைதான் வந்து எனக்குள் புகுந்து பாடினாள்’எனக் கூறியுள்ளார்.
