இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் குறித்த சுவாரஸ்யமான நினைவுகளை நடிகை ராதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ரஜினியை அனைவரும் ‘சார்’ என்று அழைக்கும் நிலையில், தான் மட்டும் ‘ரஜினி’ என்றே உரிமையோடு அழைப்பதாகக் கூறிய அவர், ரஜினியின் இருவேறு முகங்களைத் தான் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். ஆரம்ப காலங்களில் ரஜினி, ஸ்ரீதேவி மற்றும் தான் ஆகிய மூவரும் படப்பிடிப்பு முடிந்ததும் ஏவிஎம் ஸ்டூடியோவிலிருந்து போட்டி போட்டுக்கொண்டு கார்களில் வீட்டிற்குத் திரும்பும் பழைய நினைவுகளை அவர் இந்த நேர்காணலில் மலரும் நினைவுகளாகப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, ஒருமுறை நள்ளிரவில் ரஜினியுடன் பைக்கில் சென்னையைச் சுற்றி வந்தபோது, தான் கஷ்டப்பட்ட இடங்களை ரஜினி ஒவ்வொன்றாகக் காட்டியது நெகிழ்ச்சியாக இருந்ததாக ராதிகா குறிப்பிட்டுள்ளார். அப்போது ஒரு கார் தங்களை வழிமறித்துச் சடன் பிரேக் போட்டு நின்றதாகவும், ரஜினி ஒரு பெண்ணுடன் சுற்றுகிறார் என நினைத்து லதாவின் சகோதரர் (அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா) பதற்றத்தில் அப்படிச் செய்ததாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். ஆனால், தான் ரஜினியுடன் பைக்கில் செல்வது லதாவிற்கு ஏற்கனவே தெரியும் என்று கூறி இந்தச் சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பேட்டியில் முடித்துள்ளார்.
