தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக தன்னுடைய நடிப்புக்காக முத்திரைப் பதித்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. தாய் மொழி தமிழாக இல்லை என்றாலும் அந்த மொழியை உணர்ந்து அதற்கேற்றார்போல பாவனைகள் கொடுத்து ‘எக்ஸ்பிரஷன் க்யீன்” என்றே பெயர் வாங்கியவர்.
தனது அற்புத நடிப்பால் வித்தியாசமான கதாபாத்திரங்களால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். ஜோதிகாவின் குடும்பம் கலை குடும்பமாகவே இருந்துள்ளது. அவரின் அக்காவான நக்மாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த நிலையில் அதன் பிறகு இருவரும் காதல் வலையில் சிக்கி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஜோதிகா. அதன் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து தன் வயதுக்கு ஏற்ற வேடங்களை ஏற்று நடித்தார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள அவர் தொடர்ந்து இந்தி படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் நடித்த முதல் இந்தி படம் தோல்விப் படம். அந்த படத்தை பிரியதர்ஷன் சார் இயக்கி இருந்தார். ஆனந்த் கண்ணா நடித்திருந்தார். ஆனாலு, எனக்கு அங்கு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் எனக்கு என் கணவர் சூர்யாவோடு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படமும் பெரிய வெற்றியில்லை. ஆனால் தமிழ் மக்கள் என்னை நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள். இப்படியாகதான் நான் தமிழ் சினிமாவில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன்” எனக் கூறியுள்ளார்.
