மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.
மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலமாகத்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் அரசியலில் களம் இறங்கி கலக்கினார். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அனைவரும் போற்றக்கூடிய பெண்மணி ஆக திகழ்ந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா குறித்து பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னோட அப்பா கிரிக்கெட்டர் வெங்கட்ராகவனை ஜெயலலிதாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவர் அண்ணன் மூலமாக ஜாதகத்தை கொண்டு போய் கொடுத்தார். ஆனால் ஜாதகம் பார்த்ததில் கோத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதா இரண்டு பாடல்களை பாடி இருந்தாங்க. அன்பே தேனே படத்தில் கூட அவங்க பாடினார்கள். முத்தமிழ் அறிந்த அரசி என்று ஜெயலலிதாவை கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து திறமைகளையும் கொண்டவர். அதன் பிறகு அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என தயாரிப்பாளர் முக்தாரவி பேசியுள்ளார்.