விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்ப கதை, காதல் கதை, பெண்ணின் முன்னேற்றம் மற்றும் கல்லூரி காதல் என பல வெரைட்டிகளில் சீரியல்களை தயாரித்து அதனை ஒளிபரப்பி வருகிறார்கள். அதன்படி டிஆர்பி யில் பல ஆண்டாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஸ் சம்பத்தை திவ்யா காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி இருந்தது.

ரீல் ஜோடி விரைவில் ரியல் ஜோடி ஆகப் போகிறார்கள் என்று செய்திகளும் வீடியோக்களும் வெளியான நிலையில் இது குறித்து நடிகை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விளக்கமளித்துள்ளார். அந்தப் பதிவில், சமீபத்தில் என்னை பற்றி வெளியான செய்தியை கண்டேன். பாக்கியலட்சுமி சீரியலில் ஒன்றாக பணியாற்றும் நானும் விகாஷ் சம்பத்தும் காதலித்து வருகிறோம் என பலரும் செய்தி வெளியிட்டதுடன் என் கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் இருவருக்குமே குடும்பங்கள் உள்ளது. எங்களைப் பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை. இனி இப்படி யாரும் செய்ய வேண்டாம். என் வாழ்வில் நடந்த விஷயங்களை மீண்டும் நினைவு கூறுவது என்னை கவலையில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்திகள் என்னை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கின்றன. இதை ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொண்டு பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

