நடிகர் ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத வெற்றிப் படங்களில், 1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘படிக்காதவன்’ திரைப்படமும் முக்கியமானதுஇந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாடகை கார் ஓட்டுநராக நடித்திருப்பார். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அதிலும் ‘ஊர தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டே கண்மணி ஏ கண்மணி’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத எவர்கிரீன் பாடலாக நிலைத்துவிட்டது.
இந்தப் படம்தான் ரசிகர்கள் பலரையும் ரஜினியின் நடிப்பைப் பார்த்து கண்ணீர் விட வைத்தது. இந்த வெற்றிப் பாடலான ‘ஊர தெரிஞ்சுகிட்டே’ பாடலில் நடிகை அம்பிகா நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பாடலில் தான் முதலில் இல்லை என்றும், தன்னையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் ராஜசேகரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முதலில், இரண்டே வரிகள் பாடிவிட்டு இரண்டு மணிநேரத்தில் முடித்துவிடலாம் என்றுதான் இயக்குநர் கூறியிருக்கிறார். ஆனால் நான்கு மணி நேரமானது; இறுதியில் படப்பிடிப்பு இரவு முழுவதும் நடந்திருக்கிறது. அதனால் அந்தப் பாடல் முழுவதும் தான் இடம்பெற்றதாகவும் அம்பிகா கூறினார்.
ரஜினி சார், “இந்தப் படத்தில் ‘ஜோடி கிளி’ பாடல்தான் பெரிய ஹிட்டாகும்” என்று கூறியிருந்தார். ஆனால், ‘ஊர தெரிஞ்சுகிட்டே’ பாடலே மாபெரும் வெற்றி பெற்றது. ஷூட்டிங் சிரமங்களால், “நானே வலிய மாட்டிக்கிட்டேனே” என்று ஆரம்பத்தில் வருத்தப்பட்டிருந்தாலும், அந்தப் பாடலில் தான் நடித்திருக்காவிட்டால் பெரிய தவறு செய்திருப்பேன் என இப்போது மகிழ்ச்சியுடன் அம்பிகா நினைவு கூர்ந்தார்.
