தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் குடும்பம் சினிமா குடும்பம் என்பதால் சிறுவயதிலேயே திரைப்படங்கள் மீதும் திரைத்துறையின் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. கல்லூரியில் அதை தொடர்பான படிப்பை தேர்வு செய்து படித்த விஜய் நடிக்கும் ஆர்வத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்து விட்டார். அம்மா ஷோபா திரைக்கதையில் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய அளவுக்கு கை கொடுக்காததால் விஜயகாந்தை வைத்து எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜயை அவருடைய தந்தை நடிக்க வைத்தார். அப்படி விஜயின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
![]()
செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான விஜய் தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே ரசிகன், தேவா மற்றும் விஷ்ணு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். வெறும் நடிப்போடு நின்றுவிடாமல் கமர்சியல் ஹீரோவுக்கு தேவையான நடனம் மற்றும் ஆக்சன் ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு படிப்படியாக விஜய் முன்னேற தொடங்கினார். சாதாரண ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த விஜயை 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமன் வெளியே கொண்டு வந்தார். இதுதான் விஜயின் முதல் வெற்றி படிக்கட்டு. திரை வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கைக்கும் பூவே உனக்காக திரைப்படம் தான் முக்கியமானது.

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் சங்கீதா பூவே உனக்காக படத்தை பார்த்து தான் விஜயின் தீவிர ரசிகையாக மாறினார். விஜய்யை பார்ப்பதற்கு லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தவர் முதலில் ரசிகையாக அறிமுகமாகி அதன் பிறகு தோழி காதலி என மாறி இறுதியில் மனைவியாகவும் மாறினார். இதனை தொடர்ந்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இளைஞர்களை தாண்டி பெற வயதினரையும் விஜய் கவர்ந்தார். அதன் பிறகு பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், பகவதி மற்றும் திருமலை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களில் நடித்த விஜய் ஆக்சன் படங்களான கில்லி, போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் அசுரத்தனமாக நடித்தார்.

இப்படி தொடர்ந்து திரைப்படங்களில் சாதாரண நடிகராக தொடங்கி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த விஜய் இளைய தளபதி விஜய் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படம் ஆகும். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ள நிலையில் இந்த படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதனால் சினிமாவிற்கு விஜய் முழுக்கு போட உள்ளார். இப்படியான நிலையில் விஜய் குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஜூன் 22 ஆம் தேதி தவறாமல் வீடு பறந்து விடுவாராம். தன் பிறந்தநாள் அன்று அம்மா சோபாவின் பக்கத்தில் இல்லாமல் அவர் தவறவிட்டது இல்லை. அம்மா சமைக்கும் அசைவ உணவுகளுக்கு விஜய் எப்போதுமே அடிமை. எம்ஜிஆருக்கு பிறகு அம்மா சென்டிமென்டில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. அந்த அளவிற்கு விஜய் அம்மா பாசம் கொண்டவர் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
